இறைமை தமிழ்மக்களின் கைகளில் இருக்கின்றது என்ற நோக்குநிலையுடன், இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசை மட்டும் மையம் கொண்டிருக்கும் வல்லரசுகளின் ஆட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில், அனைத்துலக உறவுக் கொள்கை ஒன்றை தமிழர் தேசம் வகுத்துக் கொள்ளவேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவளை மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் உரிமையினையும் மறுக்கும் சிங்கள அரசுடன் உரையாடி, பேச்சுவார்த்தைகளை நடாத்தி உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனத் தமிழர் தலைவர்கள் எவரும் காத்திருப்பார்களேயானால் இவர்களின் நிலை இலவு காத்த கிளிகளின் கதை போல்தான் இருக்கும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு நீக்கத்தின் அவசியம், இறுகிவரும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ளல், சர்வதேசத்தின் நலன்சார் அரசியலை கையாளுதல், தமிழர் தேசத்துக்கான வெளியுறவுக் கொள்கை என இம்மாவீரர் நாளில் தமிழர் தேசம் வகுத்துக் கொள்ள வேண்டிய அரசியல் இராஜதந்திர செயல்வழிப்பாதை குறித்து தெளிவாக முன்வைத்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தியின் முழுவடிவம் :
இன்று தேசிய மாவீரர் நாள்.
இது தமிழீழத் தேச அரசினது உருவாக்கத்துக்காகத் தமது இன்னுயிர்களை விதையாக ஈந்த தேசவித்துக்களின் திருநாள்.
தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் சமத்துவமாகவும் பாதுகாப்பாகவும் இனவழிப்புக்கு உட்படாமல் வாழ்வதற்குச் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைதல் ஒன்று மட்டுமே தீர்வாக இருக்க முடியும் என்று உறுதியான நம்பிக்கையுடன் வரலாறு படைத்தவர்களின் பெருநாள்.
நமது தேசத்தின் பிள்ளைகளை நமது நெஞ்சக்கூட்டில் இருத்தி, அவர்களின் திருவுருவங்களை நினைந்துருகி நம் மக்களெல்லாம் அவர்களை வணங்கி நிற்கும் புனித நாள்.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலை மூச்சைத் தமது மூச்சாக நிறுத்திச் சுமந்து நின்றவர்கள் நமது மாவீரர்கள்.
இராணுவப் பெருங்களங்களில் பெரும்வீரம் காட்டி, அறநெறி போற்றி உலகமெங்கும் தமிழர் மாண்பை முரசறைந்தவர்கள் நம் மாவீரர்கள்.
ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சனையைத் தமது ஈகத்தாலும் வீரத்தாலும் அனைத்துலக அரங்கில் நிலைநிறுத்தியவர்கள் மாவீரர்கள்.
உலக இராணுவ வரலாறு கண்ட மிகப் பெரும் சமர்களுக்கு ஒத்த பல சமர்களை மிகக் குறைந்த படைபலத்துடன் வெற்றி கொண்டு உலக இராணுவங்களையே மலைப்புடன் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் நமது மாவீரர்கள்.
ஒரு சிறிய தேசத்;தின் அரசியல் பலம் இராணுவபலத்தின் ஊடாக கட்டியெழுப்பப்பட முடியும் என்பதனை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டியவர்கள் நமது மாவீரர்கள்.
உலகில் தமிழ் மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் மாவீரர்களை வணங்கி நிற்கும் மக்கள் அனைவருடனும் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தனது சிரம் தாழ்த்தி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி நிற்கிறது.
விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கத்தின் அவசியம்
அன்பான மக்களே,
நமது மாவீரர்களை உலக அரசுகள் எதிர் கொண்ட விதம் அறத்தின்பாற்பட்டதல்ல. அநீதியின் பாற்பட்டது. அறத்தின் பாற்பட்டு இந்த உலக அரசியல் ஒழுங்கு இயங்கியிருக்குமானால் நமது மாவீரர்களை இன்று அனைத்துலகமும் கையில் தாங்கிக் கொண்டாடியிருக்கும்.
இலங்கைத் தீவில் தமிழீழத் தனியரசு அமைவது தமது நலன்களுக்கு ஒத்திசைவானதா இல்லையா என்பதே உலக அரசுகள் போட்ட கணக்கு.
தமது நலன்களுடன் ஒரு போராட்டம் ஒத்திசைந்தால் உலக அரசுகளின் பார்வையில் அப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராளிகள். தமது நலன்களுக்கு ஏற்றதாக இல்லாது விட்டால் அவர்கள் பயங்கரவாதிகள். இதுதான் அரசுகளின் கணக்கு.
இந்தக் கணக்கைத்தான் உலக அரசுகள் நமது போராட்டத்திலும் போட்டன. நமது போராளிகள் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர். பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் நமது விடுதலை இயக்கமும் இணைக்கப்பட்டது.
பயங்கரவாதம் எனும் சொல்லுக்கு உண்மையான வரைவிலக்கணமாக இருந்து அரச பயங்கரவாதத்தை மிகக் கொடுமையானவகையில் செய்து வந்த பல அரசுகளும் எமது போராளிகளைப் பயங்கரவாதிகளாக்கி மகிழ்ந்தன.
இக் குற்றச்சாட்டின் நோக்கம் போராட்டத்தின் அரசியல் இலக்கை நீர்த்துப் போகச் செய்வதே. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குற்றம் சாட்டுவதன் மூலம் போராட்டத்தின் நியாயங்களைப் பலவீனப்படுத்தும் முயற்சியே.
அரசுகளின் காட்டாட்சி நடக்கும் உலக அரசியலில் ஒரு சின்னஞ் சிறிய தேசம் தனது சக்தியனைத்தையும் திரட்டி நீதிக்காகப் போரிட்ட போதும் அத் தேசத்தின் குரல் இந்த அரசுகளின் காதுகளில் விழவில்லை.
சிங்களப் பேரினவாதம் தனக்கென ஒரு அரசை வைத்திருந்த ஒரேயொரு காரணத்தால், அந்தப் பேரினவாத அரசுடன் இசைந்தவாறு தமது நலன்களை அடைந்து கொள்வதில் அனைத்துலக அரசுகள் கொண்டிருந்த பெருவிருப்பால் சிங்களத்தின் தமிழினவழிப்புக்கும் இவ் அரசுகள் உறுதுணையாக இருந்தன.
இது மாவீரர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் உலக அரசுகள் இழைத்த ஓர் அநீதி. அரசுகள் ஆடையணிவதில்லை எனவும் அவை நலன்களைத்தான் ஆடைகளாக அணிந்து கொள்பவை எனவும் கூற்றொண்டுண்டு. இந் நலன்மைய உலக ஒழுங்கில் சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து மட்டுமல்ல, இந்த அரசுகளிடமும் நாம் நீதி வேண்டிப் போராட வேண்டியவர்களாக உள்ளோம்.
இதன் அர்த்தம் நாம் இந்த அரசுகளை எதிரிகளாகக் கருதுகின்றோம் என்பதல்ல. இந்தியா மற்றும் மேற்குலக அரசுகளை நட்புச் சக்திகளாக அணுகும் நிலைப்பாட்டைத்தான் நாம் கொண்டிருக்கிறோம். இருந்தும் நமது விடுதலை இயக்கத்தின் மீதும் மாவீரர்கள் மீதும் இந்த அரசுகள் சுமத்தியுள்ள பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டை எதிர்த்து நமது சக்திக்கு உட்பட்ட வகையில் நாம் போராடித்தான் ஆக வேண்டும்.
இது மாவீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என்பது மட்டுமல்ல, போராடும் தமிழீழ தேசத்துக்கும் அத்தியாவசியமானது. இந்த அரசுகளின் பயங்கரவாதப் பட்டியல் அரசியல் சார்ந்தது தான். கிடைக்கும் அரசியல் மற்றும் நீதிப் பொறிமுறைகளுக்குள் அதனை எதிர்த்;து நிற்பதுவும் ஓர் அரசியல் போராட்டம் தான். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் இப் போராட்டமும் இணைக்கப்பட வேண்டியது எனவே நாம் கருதுகிறோம்.
இந்தப் போராட்டத்தைத் தான் நாம் அண்மையில் பிரித்தானியாவில் மேற்கொண்டிருந்தோம். இந்தியாவிலும் மேற்கொள்கிறோம். பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது பயங்கரவாதப் பட்டம் சூட்டித் தடை விதிக்கப்பட்ட முறை பிழையானது எனத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
இது ஒரு சிறிய வெற்றிதான். ஆனால் அரசொன்றின் முடிவு தவறு என வெளிப்படுத்தப்பட்டது முக்கியமானதொரு வெற்றி. இதன் இறுதி முடிவு அரசு சார்பாகப் போகவும் கூடும். இருப்பினும் அரசுகளின் தமிழர் விரோத முடிவுகளை தொடர்ச்சியாக் கேள்விக்குள்ளாக்கி அரசியல் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் உத்தி சார்ந்த செயற்திட்டத்தை நாம் வகுத்துச் செயற்பட்டு வருகிறோம்.
இறுகிவரும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ளல்
அன்பானவர்களே,
நாம் இன்று நெருக்கடியானதொரு அரசியற் காலகட்டத்தை எட்டியிருக்கிறோம். இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதம் தன்னை மேலும் வலுப்படுத்தியிருக்கும் நிலையை கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் நாம் அவதானி;க்க முடிகிறது.
சிங்கள அரசியல் சேனநாயக்கா, பண்டாரநாயக்கா குடும்பங்களைக் கடந்து இப்போது இராஜபக்ச குடும்பத்தை மையம் கொண்டுள்ளது.
தமிழர் ‘ஆக்கிரமிப்பை’ வெற்றி கொண்ட நவீன துட்டகைமுனுக்களாக இராஜபக்ச சகோதரர்கள் தம்மைச் சிங்கள மக்கள் மத்தியில் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். தமது யுத்தகள வெற்றியினை அரசியல் முதலீடாக மாற்றியிருக்கிறார்கள்.
இந் நிலையில் சிங்களப் பேரினவாதத்தை மேலும் சிறிலங்கா அரசில் இறுக்கமாக நிலைநிறுத்தும் வேலைகளை அவர்கள் முன்னெடுப்பார்கள்.
இலங்கைத்தீவில் என்றும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் வளர்ந்தோங்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் செய்வார்கள்.
இதனை இன்னொரு வகையில் சொன்னால் சிங்களத்தின் தமிழின அழிப்பு இனிவரும் வருடங்களில் இன்னும் தீவிரமடையும்.
இங்கு தமிழின அழிப்பு என்பது தமிழ் மக்கள் ஒவ்வொருவரையும் பௌதீகரீதியாகக் கொன்றொழிப்பதைக் குறிக்கவில்லை. மாறாக இலங்கைத்தீவில் தமிழர் தேசம் என்றதொரு அரசியல் அலகை இல்லாது ஒழிப்பதைத்தான் குறிக்கிறது. தமிழ்மக்களின் தேசத் தகைமைகளை அழித்தொழிப்பதைத்தான் குறிக்கிறது.
இது சிங்கள பௌத்த இனவாத அரசின் நீண்டகால இலக்கு. சிங்கள அரசைத் தலைமை தாங்கும் எந்தத் தவைர்களும் இதனைச் செய்வார்கள். தமிழர்களுடனான யுத்தத்தை வென்;றதாக வெற்றி முரசம் கொட்டும் இராஜபக்சக்களுக்கு இதனை ஒரு படி கூடுதலாகச் செய்யும் விருப்புண்டு. இதன் மூலம் சிங்கள மக்களின் வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும் ஐதீகக் கனவுகளும் அவர்களுக்கு உண்டு.
இதனால் சி;ங்களத்தின் ஆக்கிரமிப்பு தமிழ் மண்ணில் மேலும் தீவிரமடையும். கொரோனா உலகப்பெருந்தொற்று அரசுகளுக்குத் தந்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தமிழர் தேசத்தின் அரசியற் குரலை மேலும் நசுக்கவும் தமிழர் தேசத்தின் வளர்ச்சியை மேலும் நறுக்கவும் இவர்கள் முயல்வார்கள்.
தமிழ் மக்கள் தமது மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் உரிமையினையும் இவர்கள் மறுப்பார்கள்.
இவர்களுடன் உரையாடி, பேச்சுவார்த்தைகளை நடாத்தி நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனத் தமிழர் தலைவர்கள் எவரும் காத்திருப்பார்களேயானால் இவர்களின் நிலை இலவு காத்த கிளிகளின் கதை போல்தான் இருக்கும்.
தமிழ் மக்களுக்கு சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்த்து அரசியல் வழியில் போராடுவது மட்டும்தான் இப்போதுள்ள தவிர்க்க முடியாதவொரு தெரிவாக இருக்கும். இந்தப் போராட்டம் அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து சட்ட எல்லைகளைத் தாண்டிக் கிளர்ந்தௌ வேண்டும். சிறிலங்காவின் அடக்குமுறைச் சட்டங்களுக்குட்பட்ட அடையாள எதிர்ப்பை மட்டும் காட்டுவது உரிய பயனை வழங்கப்போதில்லை.
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் விடயத்தில் மக்கள் சட்ட எல்லைகளையெல்லாம் தாண்டி தமது சுதந்திர வேட்கையை வெளிப்படுத்துவார்கள் என்பது எமது நம்பிக்கை.
சிங்கள அரசு, தமிழர் தேசத்தை அழித்தொழிக்கும் கைங்கரியத்தை அனைத்துலக அரசுகளைத் தமக்குச் சாதகமாகக் கையாள்வதன் மூலம் நடைமுறைப்படுத்தலாம் என எண்ணுகிறது.
இந்து மகா சமுத்திரம் உலக வர்த்தகத்தில் வகிக்கக்கூடிய பங்கு காரணமாக இதன் முக்கியத்துவம் 21 ஆம் நூற்றாண்டில் மேலும் வளர்ச்சியடையக் கூடியதொரு சூழலும், இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடவமைவும், இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கைத் தீவில் காட்டும் அக்கறையும் உலக அரசுகளைக் கையாளும் வாய்ப்பைத் தமக்குத் தரும் என இராஜபக்சக்கள் கருதும் நிலை உண்டு.
மேலும் அமெரிக்கா தலைமையிலான அரசுகள் மேற்கொண்ட ஆட்சிமாற்ற ஆட்டத்தை சிங்கள பௌத்த தேசியவாதத்தின் துணையுடன் இராஜபச்சக்கள் முறியடித்து பெருவெற்றி கொண்டிருக்கிறார்கள். இந் நிலையில் தம்முடன் பேரம் பேசி நலன்களை உறுதி செய்து கொள்வதை விட வேறுவழியேதும் உடனடியாக இல்லை என்பதனை அனைத்துலக அரசுகளும் புரிந்து கொண்டிருப்பார்கள் எனவும் இராஜபக்சக்கள் எண்ணுவதற்கு இடமுண்டு.
தமிழர் தேசம் வகுத்துக் கொள்ள வேண்டிய மூலோபாயம்
இலங்கைத்தீவில் வல்லரசுகளின் ஆட்டம் சிறிலங்கா அரசை மட்டும் மையம் கொண்டிருப்பதனைத் தடுத்து நிறுத்துவது என்பதைத் தமிழர் தேசம் தனது உத்தியாக வகுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தமிழர் தேசத்துக்கான அனைத்துலக உறவுக் கொள்கை வகுக்கப்படுவதோடு தமிழர் தேசத்தின் இறைமை தமிழ் மக்களின் கைகளில் இருக்கின்றது என்ற நோக்குநிலையுடன் தாயகத் தமிழ் அரசியற் தலைவர்கள் செயற்பட வேண்டும்.
தமிழர் தாயகத்தின் நில கடல் வளங்கள் தமிழர் தேசத்துக்குரியவை என்ற அரசியல் நிலைப்பாட்டைத் தமிழ்த் தலைவர்கள் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். தமிழர் தாயகத்தின் எந்தப் பகுதிகளையும் அனைத்துலக அரசுகள் பயன்;படுத்துவதானால் தமிழ்த் தலைவர்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும். அதனை மீறி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அனைத்தையும் எதிர்த்துத் தமிழர் தாயகத்தில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இப் போராட்;டங்கள் நாடாளுமன்ற பகிஸ்கரிப்பு போன்ற வடிவங்களை எடுக்கும்போது அவற்றின் மீது அனைத்துலகக் கவனம் குவியும்.
இவற்றையெல்லாம் தாயகத்தில் செய்வதற்குரிய அரசியல் விருப்பு தாயகத் தலைவர்கள் பலரிடம் இருக்கிறதா என்பது இங்கே முக்கியமானதொரு கேள்வியாக எழுகிறது.
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதில்; அரசியல் தலைவர்கள் காட்டும் அக்கறை உண்மையானதாக இருக்கும் பட்சத்தில் தமிழர் தேசத்தை அனைத்துலக அரசுகள் மத்தியில் தனித்துவமான தரப்பாக நிலைநிறுத்துவதில் தமிழ்த் தலைவர்கள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
இலங்கைத்தீவில் தமது நலன்களை அடைந்து கொள்வதில் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற அரசுகளுக்கிiடேய ஏற்படக்கூடிய போட்டி, புவிசார் அரசியல் சார்ந்து தமிழ் மக்களுக்குத் தரக்கூடிய வாய்ப்புக்களை இனங்கண்டு உரிய வியூகங்களை வகுக்க வேண்டிய கடமை தமிழர் தேசத்துக்கு உண்டு.
இவ் விடயத்தில் ஈழத் தமிழ்த் தாயகத்தையும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களையும், தமிழ்நாட்டு மக்களையும், உலகத் தமிழ் மக்களையும் இணைத்து ஒரே தரப்;பாக நாம் நிலைநிறுத்த வேண்டும்.
இதற்கான முன்னெடுப்பினைத் தாயக மக்களிடையே தேசிய நிலைப்பாட்டுடன் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக நின்று மேற்கொண்;டால் அது கூடுதல் மட்ட அனைத்துலக அக்கறையினைப் பெறும். தாயகத்தில் எடுக்கப்படும் இம் முயற்சிகளுக்கு உரிய ஆதரவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கும்.
இந்திய பெருங்கடல் அரசியலில் தமிழர்கள் ஒரு தரப்பாகுதல்
அன்பான மக்களே,
நாம் ஒரு தேசமாக நம்மை அடையாளப்படுத்திக் கொண்டாலும் அரசில்லாத ஒரு தேசமாகவே இன்று இருக்கிறோம். ஏறத்தாழ 90 மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டத்துக்கென உலகில் ஒரு நாடு இன்றில்லை. ஓர் அரசு இல்லை.
உலகில் தமிழ் மக்களுக்கெனவொரு அரசு வலுவாக இருந்திருக்குமானால் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நடப்பதற்கான நிலைமைகள் உருவாகியிருக்காது.
நாம் அரசற்ற தேசமாக இருப்பதனால் சிறிலங்கா அரசுக்குள் கட்டுண்டு போயிருக்கிறோம். இதனால் எம்மிடையே ஈழத் தமிழர் தேசம் குறித்த சுதந்திரமான சிந்தனைகளைக் கட்டுப்படுத்தும் நிலைமைகளே உள்ளன. இந் நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
மேலும்; உலகநோக்கில் இருந்து பார்க்கும் போது அரசுகள் என்ற முறைமைக்குள்ளும் நாம் சிக்குண்டு போயிருக்கிறோம். இதனாற் தான் வல்லரசுகள் இலங்கைத்தீவில் அடைந்து கொள்ள முயலும் நன்மைகள் உள்நாடு சார்ந்தவையாக மட்டும் அமைவதில்லை.
அரசுகளின் இந்து-பசுபிக் சமுத்திரப் பிராந்திய வர்த்தக, பொருளாதாரப் போட்டியில் இலங்கைத்தீவும் முக்கியமான கேந்திர முக்கியத்துவத்தைப் பிடித்துக் கொள்கிறது. வர்த்தக, பொருளாதார நன்மைகளை நிலைநிறுத்த இராணுவ நடவடிக்கைகளையும் இவ் அரசுகள் மேற் கொள்வதுண்டு.
இருப்பினும் அவ்வாறு நடக்கும்போது தமது இராணுவ நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு சார்ந்;தும்;, ஜனநாயகம் சார்ந்தும், அறம் சார்ந்தும் காரணங்களை அரசுகள் கூறிக் கொள்வதுண்டு;. அரசுகள் இவ் விடயத்தில் நேர்மையற்றதொரு இரட்டைநிலையில் தான் இருந்து வருகின்றன.
இருந்தபோதும் நாம் அனைத்துலக அரசுகளின் ஆதரவுகளை எமக்குச் சார்பாக வென்றெடுக்க வேண்டிய அவசியம் உண்டு.
பல தலைவர்களும் அதிகாரிகளும் தம் அரச பொறுப்பில் இருக்கும் போது பின்பற்றாத, பேசாத உண்மைகளைப் பின்னர் பேசுவார்கள். காலம் தாழ்ந்தென்றாலும் உண்மைகள் வெளிவர இவை உதவுவதுண்டு.
உதாரணமாக, முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நடைபெற்ற போது அமெரிக்க அதிபாராக இருந்த ஒபாமா அவர்கள் அண்மையில் வெளியிட்ட தனது நூலில் அங்கு நடைபெற்றது இனவேட்டை (ethnic slaughter) எனக் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழினவழிப்புத் தொடர்பான அனைத்துலக விசாரணைக் கோரிக்கைகள் நலிவடைந்து போகவில்லை.
சிங்களத்தின் தமிழினவழிப்பு என்றோவொரு நாள் உலகின் மனச்சாட்சியைத் தட்டி தமிழர் தேசத்துக்கான வாய்ப்;புகளைத் திறக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் செயலாற்றுவோம்.
மாவீரர்களின் நினைவு நாளில் அறம் வெல்லும் என்ற தார்மீக நிலைப்பாட்டை, நீதியை மதிக்கும் மானுட சமூகத்தின் மீது கொண்ட நம்பிக்கையாக நாம் வரித்துக் கொள்வோம்.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும். நம் மாவீரர் கனவு பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் அணி திரள்வோம்.
நம்மால் இயலக்கூடிய அனைத்து வழிகளிலும் மாவீரர் கனவை நனவாக்க உழைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.