மக்கள் வீடுகளில் இருந்தால் மட்டுமே ஜூன் 14இல் நாட்டைத் திறக்கலாம் : பொலிஸ் பேச்சாளர்

நாட்டில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 14 ஆம் திகதி நீக்குவதா, இல்லையா என்பது மக்களின் கைகளில்தான் உள்ளது.இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள் நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமது ஒத்துழைப்பை சுகாதாரத்துறைக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள காலகட்டத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தால் மட்டுமே ஜூன்14 அன்று நாட்டை மீண்டும் திறக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நேற்று முன்தினம் மட்டும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக 975 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, மேல்  மாகாணத்துக்குள் வரும் 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் 59 ஆயிரத்து 280 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்துள்ளமை பதிவாகியுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.    
—————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *