பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பிரதமர் ஆலோசனை

விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்வின் பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று (11) ஆலோசனை வழங்கினார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.


சுற்றுச்சூழல், மீன்வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி, கப்பல் தீயினால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக மதிப்பிடவும், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து முழு இழப்பீட்டைப் பெறுவதற்கும், கப்பலை வெளியேற்றுவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.


சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்தார்.
கொவிட் தொற்று நிலைமை காரணமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு  வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு கப்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தினருக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் எனவும்  பிரதமர் இதன்போது தெரிவித்தார்.


குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, ரோஹித அபேகுணவர்தன, அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, நாலக கொடஹேவ மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், சட்டமா அதிபர் சஞ்ஜை ராஜரட்ணம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் யூ.டீ.சீ.ஜயலால், இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் தயா ரத்நாயக்க, தேசிய சமுத்திர பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சிறிபால அமரசிங்க உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பலவற்றின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
——————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *