நைஜீரியாவில் அரசை எதிர்த்து பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நைஜீரியாவில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்த நாட்டின் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பொலிஸ், இராணுவ கட்டிடங்கள் மற்றும் சிறைச்சாலையைக் குறி வைத்து துப்பாக்கியால் சுட்டும், எறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள்.
துப்பாக்கி ஏந்திய நபர்கள் ஒரே நேரத்தில் பல அரசு கட்டிடங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தினார்கள்.
சிறையில் நடத்திய தாக்குதலைப் பயன்படுத்தி 1,800க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
அதன்பின் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆனால் பிரிவினைவாதிகள் மீது நைஜீரிய காவல்துறை ஜெனரல் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து நைஜீரிய சிறைச்சாலையின் செய்தித் தொடர்பாளர் பிரான்சிஸ் ஏனோபர் கூறியதாவது:-
தாக்குதல் நடத்தியவர்கள் ஆயுதங்களுடன் வந்தனர். இயந்திர துப்பாக்கி முதல் கையெறி குண்டுகள் வரை அனைத்தையும் வைத்திருந்தனர்.
அவர்கள் பொலிஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கை அடைந்து ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் அது முறியடிக்கப்பட்டது.
சிறையில் இருந்து தப்பிய கைதிகளை மீண்டும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
Reported by : Sisil.L