நாட்டின் நலன்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் உலக வல்லரசுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும் அதன்காரணமாகவே உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு கொழும்பில் போராட்டம் நடத்தியதாகவும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் வெளி கட்சியின் நிகழ்ச்சி நிரலின் படி செயற்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தின் தலைவராக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பாம்பியோ இருக்கும் நிலையில் அவரது வருகை எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வழி வகுக்கும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
அதேநேரத்தில் நாட்டினதும் நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து அரசாங்கம் விவாதங்களை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எனவே, இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க மக்கள் விடுதலை முன்னணி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.