தமிழகத்தின் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு படகு மூலமாக வருவதற்கு முயன்ற பிரித்தானிய போதைப்பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் அவர் குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ஜோனதன் தோர்ன் (வயது 47) தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் வருவதற்காக, தூத்துக்குடி கடற்கரையில் சுற்றிக்கொண்டு இருந்த போது கியூ பிரிவு பொலிஸாரால் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் 2 லட்சத்து 10 ஆயிரம் இந்திய ரூபாவையும், 2 ஆயிரம் ரூபா இலங்கைப் பணமும் வைத்திருந்தார்.
அவை அனைத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.பொலிஸார் ஜோனதன் தோர்னிடம் நடத்திய விசாரணையில், அவர் பிடிபட்டது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் ஏற்கனவே மும்பையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்.
இந்த நிலையில் அவர் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதற்காக இலங்கையைச் சேர்ந்த ஒருவரை ஜோனதன் தோர்ன் தொடர்பு கொண்டார். அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதற்கான விலையும் பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜோனதன் தோர்ன் தூத்துக்குடியில் வந்து தங்கியுள்ளார். பின்னர் கடற்கரைக்குச் சென்று காத்திருந்தபோது பொலிஸாரிடம் சிக்கி
உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது.
மேலும் கியூ பிரிவு பொலிஸார் ஜோனதன் தோர்ன் தங்கி இருந்தபோது யாரேனும் அவரை சந்தித்துள்ளார்களா? என்பதை அறிவதற்காக அந்த விடுதியில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தூத்துக்குடியில் யாரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார், யாருடைய படகு மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்றார்? என்பன உள்ளிட்ட விபரங்களையும் பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.
அவரது உயர் ரக கைத்தொலைபேசியைத் திறக்க முடியாததால், அதில் உள்ள தகவல்களைப் பெற முடியவில்லை. அந்தக் கைத்தொலைபேசியை திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
—————-
Reported by : Sisil.L