நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் தலை பள்ளிக்கு வெளியே பத்து நாட்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே போலீஸாரால் கொல்லப்பட்டார். அவர் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று திங்கட்கிழமை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ்க்கும் மக்ரோனுக்கும் எதிராக இஸ்லாமிய நாடுகளில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. ஈரான், பாகிஸ்தான், இராக் போன்ற நாடுகளில் கடுமையான போராட்டங்கள் பிரான்ஸுக்கு எதிராக நடந்து வருகின்றன.
இந்தநிலையில் தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்துடன் தொடர்புபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சவுதிஅரேபியா அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதிஅரேபியா அரசு வெளியிட்ட அறிக்கையில்,
“ தீவிரவாதத்தை இஸ்லாமுடன் தொடர்புபடுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளது.மேலும், முகமது நபியின் உருவத்தை கார்ட்டூனாக வரைந்த பிரான்ஸின் சார்லிகெப்டோ பத்திரிகை நிறுவனத்துக்கு சவுதிஅரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இஸ்லாமிய விரோத, இஸ்லாம் வெறுப்புப் பதிவுகளைத் தடை செய்வது அவசியம். இது இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபாவேசத்தைக் கிளப்பி வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், மார்க் ஸுக்கர்பர்க்கிற்குக் கடிதம் எழுதியிருந்தார்.
அதில், ”இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களைப் படுகொலை செய்வது நடந்து வருகிறது. இதனால் தீவிரவாதமே அதிகமாகும். இஸ்லாமிய வெறுப்பைத் தடுக்க ஃபேஸ்புக் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
யூத விரோதம், படுகொலை, துவேஷம் ஆகியவற்றைத் தடை செய்தது போல் இஸ்லாமிய விரோதம், இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராகவும் நீங்கள் தடை விதிக்க வேண்டும்” என்று இம்ரான்கான் குறிப்பிட்டு இருந்தமையும் நோக்கத்தக்கது.