தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, அந்நாட்டு பிரதமர் ஜெனரல் ப்ரயுத் ச்சான்-ஓ-ச்சாவை (Prayut Chan-o-cha) சந்தித்துள்ளார்.
பேங்கொக் நகரிலுள்ள அரச மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் நிகழ்வை முன்னிட்டு, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட தூதுக்குழு இன்று அதிகாலை தாய்லாந்து சென்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், வர்த்தகம், முதலீடுகள் மற்றும் மத உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடுவது இந்த விஜயத்தின் நோக்கம் என பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இரத்தினக்கற்களை மெருகூட்டுவதற்கும் விற்பனை செய்வதற்கும் தாய்லாந்து மிகச்சிறந்த சந்தைய என தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் ச்சான்-ஓ-ச்சா தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் பொருளாதார செயற்பாடுகளை மீள கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து தாய்லாந்து பிரதமருக்கு, பிரதமர் தினேஷ் குணவர்தன விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் இரு நாட்டு அதிகாரிகள் குழுவினரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Reported by :Maria.S