தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ன காரணத்துக்காக இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினர் என்பதை தெளிவு படுத்த வேண்டும்” – இரா.சாணக்கியன்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ன காரணத்துக்காக இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினர் என்பதை தெளிவு படுத்த வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக வாக்களிக்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது ஜனநாயக விரோதமான செயல், இந்த நாட்டை பின்கொண்டுசெல்லும் செயல் என்ற அடிப்படையில் அதற்கு எதிராக வாக்களித்திருந்தோம். இதன்போது, இஸ்லாமிய சகோதரர்கள் சிலர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள். அது தொடர்பாக பல கருத்துகளை பலரும் கூறிவருகின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய சகோதரர்கள், தங்களுடைய எதிர்காலம் தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தங்கள் செய்து அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம் என நான் கருதுகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். வியாழேந்திரன் மொட்டுக்கட்சியை சேர்ந்தவர், அதனால் அவர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம். ஆனால் பிள்ளையானுடைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஒரு தனிக்கட்சியாகும் அவர்கள் ஏதாவது ஒப்பந்தங்கள் செய்தார்களா? என்ற கேள்வி எங்கள் மனதில் இருக்கின்றது.

மயிலந்தனை, மாதவனை பிரச்சினையை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சென்று, அதனை நிறுத்தச்சொல்வதை விட 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு தருவதாகயிருந்தால் இந்த பிரச்சினையை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்க முடியும்.

மேலும், கல்முனை- வடக்கு பிரதேச தரமுயர்த்துவது தொடர்பிலான கோரிக்கையினை முன்வைத்திருக்கலாம் அல்லது அரசியல் கைதிகள் 62பேர் இன்னும் உள்ளனர் அவர்களை விடுதலைசெய்தால் ஆதரிப்போம் என்றிருக்கலாம், தமிழ் பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் வைத்திருக்கும் காணிகளை விடுவிக்குமாறு கோரியிருக்க முடியும் இவ்வாறு பல நிபந்தனை முன்வைத்து வாக்களித்திருக்க முடியும்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனிக்கட்சி என்ற அடிப்படையில் பேரம்பேசும் சக்தி இலகுவாக இருந்திருக்கும். அவ்வாறான ஒப்பந்தங்களை ஏதும் செய்ததாக தெரியாது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரை வெளியில் விடுவதற்கான ஒப்பந்தமோ? அல்லது அக்கட்சியின் தலைவர் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்ற ஒப்பந்தங்களை செய்தார்களா?மக்களுடைய நலனைக்கொண்டா? அல்லது தங்களது நலனைக்கொண்டா? ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரின் பதவி ஆசை காரணமாக மாவட்ட மக்கள் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *