தன்னைத் தற்காத்துக் கொள்ளவே மனோகணேசன், என்னையும் சுமந்திரனையும் துமிந்தசில்வா விடுதலை மனு பிரச்சினையில் கோர்த்து விட்டுள்ளார் ” – செல்வம் அடைக்கலநாதன் !

தற்போது இலங்கை அரசியலில் பெரிய பிரச்சினையாக உருமாறி வுருகின்றது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவின் விடுதலை மனு தொடர்பான விவகாரமாகும். குறிப்பாக இந்த மனுவில் கையெழுத்திட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இதில் கையெழுத்திட்டிருந்தமை பெரும் விவாதங்களை தோற்றுவித்திருந்த நிலையில் அந்த கையெழுத்தை வாபஸ் வாங்குவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

மேலும் மனோகணேசன் குறித்த மனுவில் கையெழுத்திட்டது தமிழ் அரசியல்கைதிகளையும் இதனை முன்மாதிரியாக கொண்டு விடுதலை செய்யவதை வலியுறுத்தவே என குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.

இந்நிலையில் , “துமிந்த சில்வாவை விடுவிக்கக் கோரும் மனுவில் கையொப்பமிட்டதால் வந்த எதிர்ப்பில் இருந்து தப்பிக்கவே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மகஜர் ஒன்றை தயாரிக்குமாறு தன்னிடம் மனோ கணேசன் வேண்டியுள்ளார்”  என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

துமிந்தவின் விடுதலைக்கு ஏற்கனவே கையெழுத்திட்டுள்ள மனோ கணேசன், தன்னைத் தற்காத்துக் கொள்ளவே, என்னையும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் இதில் கோர்த்து விட்டுள்ளார் என்றும், செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான​ ஏற்பாடுகளைச் செய்யுமாறு, தமிழ் முற்போக்கு் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, தன்னிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அதனால், அதற்கான ஏற்பாடுகளைத் தான் செய்வதாக அவரிடம் பதிலளித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கையொப்பம் திரட்டப்பட்ட மகஜரில் தாங்கள் கையொப்பமிட்டுள்ள நிலையிலேயே, தன்னிடம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்றும், அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

துமிந்த சில்வாவையும் அரசியல் கைதிகளையும் ஒருபோதும் சம்பந்தப்படுத்த முடியாது. அதனால், அரசியல் கைதிகள் விடயத்தில் கவனம் செலுத்துவதாகவே தான் உறுதியளித்ததாகவும், அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *