டுவிட்டர் நிறுவனத்துக்கு 1 லட்சத்து 17ஆயிரம் டொலர் அபராதம் விதித்த ரஷ்யா

ரஷ்யாவில் கடந்த 2012ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் இருக்குமாயின் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளத்தை தடுப்பு பட்டியலில் வைக்க அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டு அமுலுக்கு வந்தது. அப்போது முதல் ரஷ்ய அரசு சமூக வலைத்தளங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியை கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. உண்மைக்குப் புறம்பான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியது இந்தப் போராட்டத்துக்குக் காரணம் என சமூக வலைத்தளங்கள் மீது ரஷ்ய அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்க சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக பதிவிடப்பட்ட பதிவுகளை நீக்கத் தவறியதாக கூறி டுவிட்டர் நிறுவனம் மீது ரஷ்ய அரசு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மாஸ்கோ நீதிமன்றில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் நடந்த இறுதி விசாரணையின் போது டுவிட்டர் நிறுவனம் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் டுவிட்டர் நிறுவனத்துக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் அமெரிக்க டொலர்  அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்ஏற்கனவே, கடந்த வாரம் ரஷ்யாவின் அரசு தகவல் தொடர்பு கண்காணிப்புக் குழு, 30 நாட்களுக்குள் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்கத் தவறினால் டுவிட்டருக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *