சாதாரண மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லை

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்து, பால் சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடிய சாதாரண மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்றைய தினம் (19) இரண்டாவது நாளாக பாராளுமன்றில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தனது உரையில்,

நாட்டின் 75வது வரவு செலவுத் திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதில் பல வாக்குறுதிகள் அள்ளி வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சாதாரண மக்களின் பசி பட்டினியை போக்குவதற்கான எவ்வித அறிவிப்புக்களும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இல்லை.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நாம் பல்வேறு கோரிக்கைகளை இந்த சபையிலும் சபைக்கு வெளியிலும் முன்வைத்தோம். அவற்றை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

கடந்த காலங்களில் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட அனைத்து வரவு செலவுத் திட்டங்களிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டு நாட்டில் வாழும் அடிமட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்து, பால் சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடிய சாதாரண மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லை.

குறிப்பாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டுள்ளனர்2015ம் ஆண்டில் இருந்து 1000 ரூபா சம்பள உயர்வு பெற்றுத் தருவதாக கூறி கடந்த ஐந்து வருடங்கள் அந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

1000 ரூபா பெற்றுத் தருவதாகக் கூறி இரண்டு கூட்டு ஒப்பந்தங்கள் முடிந்துள்ளன.

தற்போது மூன்றாவது கூட்டு ஒப்பந்தமும் வரப்போகிறது.

இந்நிலையில் மற்றுமொரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2021 ஜனவரி மாதம் தொடக்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க வரவு செலவு திட்டத்தில் முன்மொழிவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

இதனை செலுத்த தவறும் கம்பனிகளின் உடன்படிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்படும் என வரவு செலவு திட்ட உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது அறிவிப்பில் 1000 ரூபா அடிப்படை சம்பளம் என்று கூறவில்லை.

உண்மையில் தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய தேவை அடிப்படை சம்பளம் 1000 ரூபாவே தவிர எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து வரும் 1000 ரூபா சம்பளம் அல்ல. தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று அடிப்படை சம்பளமாக 700 ரூபா வழங்கப்படுகிறது.

எனவே 1000 ரூபா அடிப்படை சம்பளம் பெறுவதற்கு இன்னும் 300 ரூபா மாத்திரமே தேவை.

இந்த 300 ரூபாவை வழங்குமாறுதான் நாம் வலியுறுத்தி வருகிறோம். குறித்த 300 ரூபாவும் அடிப்படை நாள் சம்பளமாகவே அதிகரிக்கப்பட வேண்டும்..மாறாக வரவுக் கொடுப்பனவு, மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவு, ஈபிஎப் போன்றவற்றை சேர்த்து ஆயிரம் ரூபா வழங்கி மக்களை ஏமாற்றக்கூடாது.

காரணம் தொழிலாளர்கள் அனைவருக்கும் 75 சதவீத வேலை நாட்களை பூர்த்தி செய்ய முடியாது.

அனைத்து தொழிலாளர்களுக்கும் மேலதிக கொழுந்து பறிக்க முடியாது. இதனை முக்கியமாக கருத்திற் கொள்ள வேண்டும். 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியாக சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இன்னும் ஒரு மாதத்தில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும். எனவே இந்த புதிய ஒப்பந்தத்தின் ஊடாகவே சம்பள உயர்வு பற்றி பேச முடியும் என பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி இருக்கையில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 1000 ரூபா சம்பளம் வழங்குவது எப்படி என அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்திற்கு வெளியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு சாத்தியமில்லை என்பதை கடந்த கால அனுபவங்களில் நாம் கற்றுக் கொண்டுள்ளோம். எனவே வழமை போன்று இந்த அறிவிப்பும் ஏமாற்று நாடகம் என்றே தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

காரணம் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் ஆயிரம் ரூபா கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு இறுதியில் பொங்கலும் தீபாவளியுமே இல்லாமல் போனது. ஆனாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட இந்த அரசாங்கம் பெருந்தோட்ட கம்பனிகளை கட்டுப்படுத்தி, ஏதேனும் ஒரு வழியில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபா அடிப்படை நாள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு பூரண ஆதரவு தர நாம் தயாராக உள்ளோம்.

எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை நாள் சம்பளம் விரைவில் வழங்கப்பட வேண்டும். பிரதமர் தனது வரவு செலவு திட்டத்தில் கிராமங்கள் அபிவிருத்தி தொடர்பில் பல திட்டங்களை முன்மொழிந்துள்ளார். கிராமப்புற வீதி அபிவிருத்தி குடிநீர் வசதிகள் மின்சாரம் என திட்டங்களை சமர்பித்துள்ளார்ஆனால் மலையக பெருந்தோட்டப் பகுதிகள் தொடர்பில் அபிவிருத்தி திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

தோட்ட புறங்களில் புதிய கிராமங்கள், தனி வீட்டுத் திட்டம், வீதி அபிவிருத்தி போன்றவை எமது மக்களுக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது.

இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் எதனையும் கூறவில்லை.

ஆகவே இந்த வரவு செலவு திட்டத்தில் மலையக மக்கள் அபிவிருத்தி திட்டங்கள் இன்றி புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த சபையில் வலியுறுத்தி விடை பெறுகிறேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *