கொழும்பில் கோழி இறைச்சி விற்பனையாளர்கள் தற்காலிகமாக கடைகளை மூடத் தீர்மானம்

கோழி உற்பத்தியாளர்கள் கோழி இறைச்சி விலைகளை அதிகரித்துள்ளதால் கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தையிலுள்ள கோழி விற்பனையாளர்கள் அவர்களது  நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக தற்காலிகமாக தமது கடைகளை மூட முடிவு செய்துள்ளனர்.

இதன்படி கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள கோழி இறைச்சிக் கடைகள் நேற்று(7)  விற்பனைக்கு இறைச்சி பற்றாக்குறையான நிலையில் மூடப்பட்டன.

இது குறித்து கருத்து தெரிவித்த கோழி உற்பத்தியாளர்கள், கோழிக் குஞ்சுகளின் விலை ரூ.80இலிருந்து  200 வரையும் கோழி தீவனத்தின் விலை 6900 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.

எவ்வாறாயினும் கோழி இறைச்சி விற்பனையாளர்கள் இறைச்சியை ரூபா 650க்கு வாங்க முடியாது எனக் கூறியதுடன் இரு நாட்களுக்கு கடைகளை மூடுவதன் மூலம் இறைச்சிக்கான கேள்வி குறைந்து விலைகள் குறையும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை விலைகள் கட்டுப்பாடின்றி உயர்வதால் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை அடுத்த சில நாட்களில் ரூபா 1000 வரை அதிகரிக்கக் கூடும் என விற்பனையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

2020 மார்ச் மாதம் அரசாங்க வர்த்தமானியின் பிரகாரம் ஒரு கிலோ உரித்த கோழியின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.500 ஆகும்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *