வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.நாட்டில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கமானது வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 8,000 நோயாளர்கள் சிகிச்சை பெறும் வகையில்
கொரோனா சிகிச்சை மையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா செயலணியின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களைத் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 100 கட்டில்களைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள குறித்த சிகிச்சை நிலையத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், நோயாளருக்கு தேவையான மேலதிக மலசலகூடங்களை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பொருளாதார நிலையம் அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
—————————
Reported by : Sisil.L