குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 நோயாளிகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தின் பரூச் நகரில் பட்டேல் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 70-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.
மருத்துவமனை 4 மாடி கட்டிடத்தில் அமைந்திருந்தது. அதில் கொரோனா சிகிச்சை வார்டில் இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.
இதில் கொரோனா நோயாளிகள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடுவதற்கு முயற்சித்தார்கள். ஆனால் பல நோயாளிகள் எழுந்து இருக்கக்கூட முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களால் அங்கிருந்து ஓட முடியவில்லை. அதற்குள் வார்ட் முழுவதும் தீ பரவியது. எங்கு பார்த்தாலும் புகை மூட்டமாக இருந்தது. மருத்துவமனை ஊழியர்களும், பக்கத்துப் பகுதிகளிலுள்ள வீடுகளில் இருந்தவர்களும் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.
தீக்குள் சிக்கியிருந்த நோயாளிகளையும் காப்பாற்ற முயன்றனர். அவர்கள் முயற்சியால் பல நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர். சிறிது நேரத்தில் தீயணைப்பு படையினர் அங்கு வந்தனர். அவர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள். 1 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் வந்தது.
ஆனால் தீயில் கருகி 12 நோயாளிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுக்கையிலும், ஸ்டிரெச்சர்களிலும் படுத்து இருந்தபடியே கருகிக் கிடந்தனர்.
காயமடைந்த பலரை பக்கத்திலுள்ள வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. மேலும் பலர் உயிருக்குப் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பத்திரமாக மீட்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா இறப்பு உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் தீயில் சிக்கி கொரோனா நோயாளிகள் பலியாகியிருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்படும் என்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபாணி அறிவித்துள்ளார்.
Reported by : Sisil.L