கனடாவின் தனியார் மருத்துவமனைகளில் கொவிட்-19 இறப்புகள் ;செல்வந்த நாடுகளிடையே மோசமான பதிவைக் கொண்டுள்ளன
மற்ற செல்வந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் கொவிட்-19 இறப்புகளில் கனடா மிக மோசமான பதிவைக் கொண்டுள்ளது என சுகாதார தகவல்களுக்கான கனடிய நிறுவனம்(CIHI) நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கனடாவின் ஒட்டுமொத்த கொவிட்-19 இறப்புகளில் தனியார் மருத்துவமனைகள் 69 சதவீத இறப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது சர்வதேச சராசரியான 41 சதவீதத்தை விட கணிசமானளவு அதிகமாகும்.
கனடாவில் மார்ச் 2020 முதல் பெப்ரவரி 2021 வரை 80 அ யிரத்துக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்டகால பராமரிப்பு இல்லங்களின் பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2500 பராமரிப்பு இல்லங்களில் தொற்றுப் பரவியதன் விளைவாக 14 ஆயிரம்
குடியிருப்பாளர்கள் உயிரிழந்தனர் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோயின் முதல் 6 மாதங்களில் முதன்மையாகக் கவனம் செலுத்திய இந்த ஆய்வில் நாடு முழுவதும் தனியார் மருத்துவமனையில் வதிவோர் குறைவான மருத்துவ சேவையைப் பெற்றனர். அவர்களிடையே மருத்துவர்கள் குறைவான வருகையைக் கொண்டிருந்தனர். மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மருத்துவமனை இடமாற்றங்களும் குறைவாகவே இருந்தன என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கனடாவில் நாம் கண்ட ஏராளமான இறப்புகளைத் தவிர்ப்பதற்கு நாங்கள் செய்திருக்கக் கூடிய விடயங்கள் இருந்தன. மற்ற நாடுகள் வெளிப்படையாக தொற்று நோய்க்கு முன் சிறப்பாகத் தயாராகின.சிறந்த நிதி அமைப்பைக் கொண்டிருந்தன. அவை கனடாவைக் காட்டிலும் மிகச் சிறப்பாகச் செயற்பட்டன” என சுகாதாரக் கொள்கை ஆராய்ச்சி இயக்குநரும் CIHI ஆய்வில் பங்கேற்றவரமான மருத்துவர் சமீர் சின்ஹா கூறினார்.
Reported by : Sisil.L