ஒன்ராறியோவின் தடுப்பூசி விநியோகத்தில் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக கொவிட்-19 தடுப்பூசி பெறுவதில் ஒட்டாவா பொலிஸார் அடுத்த இடத்தில் உள்ளனர்.புதன்கிழமை தொடக்கம் அவசர மருத்துவ சேவையை வழங்கும் அதிகாரிகள் தடுப்பூசியைப் பெறவுள்ளனர். சுமார் 800 பொலிஸ் உறுப்பினர்கள் தடுப்பூசி பெற தகுதி பெற்றுள்ளதாகவும் அடுத்த சில வாரங்களில் தடுப்பூசி அவர்களுக்கு போடப்படும் எனவும் ஒட்டாவா பொலிஸ் சேவை பேச்சாளர் சிபிசி செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். தகுதி பெறாத ஏனைய உறுப்பினர்கள் எப்போது தடுப்பூசி பெறுவர் என்பது குறித்த மேலதிக தகவலுக்காக காத்திருப்பதாகவும் அச்சேவை தெரிவித்துள்ளது. தடுப்பூசி பெறும் முதல் முன்னுரிமை பட்டியலில் பொலிஸார் இணைந்து கொள்கின்றனர். அவர்களுடன் உதவி மருத்துவர்களும் தீயணைப்பு வீரர்களும் அடங்குவர்.
திங்கள் நிலவரப்படி 50,500க்கு மேற்பட்ட தடுப்பூசிகள் நகரெங்கும் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் நீண்ட கால பராமரிப்பிலுள்ளோர், ஓய்வுபெற்ற வீட்டு வசிப்பாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தொற்று நோய் ஆரம்பமானது முதல் 23 உறுப்பினர்கள் தொற்றுக்காளாகியுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.