உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட வைரஸ் தொற்று இல்லை எனக் கூறி வருகிறது. ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை எனக் கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை தடுத்ததாக வடகொரியா கூறுகிறது.
இந்த நிலையில் இப்போது வரை தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என வடகொரியா உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார் கூறுகையில், “கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி வடகொரியாவில் 23,121 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது. கடந்த மார்ச் 26ஆம் திகதி முதல் ஏப்ரல் 1ஆம் திகதி வரை 732 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதன் முடிவுகளையும் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது. எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற அரசு மறுக்கிறது” என்றார்.
இதனிடையே தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற அரசியல் மாநாடு ஒன்றில் பேசிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன், ஏற்கனவே சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கொரோனா கட்டுப்பாடுகளால் உருவான பொருளாதார இழப்பு நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளதாக கவலை தெரிவித்தார்.
Reported by : Sisil.L