ஈழத் தமிழர்களின் விவசாய நிலங்களை இலங்கை அரசு பறிக்கின்றது : வைகோ

ஈழத் தமிழர்கள் எத்தனையோ நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை இலங்கை அரசாங்கம் பறிக்கிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகளை ஏமாற்ற ஏற்கனவே பறித்த நிலங்களைத் திரும்ப வழங்குவதாகப் போக்குக் காட்டிக்கொண்டே, மறுபுறம் புதிய நிலங்களைப் பறிக்கின்றது.
அண்மையில் மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில் இலங்கை வனத்துறையினர் திடீரென எல்லைக் கற்களை நட்டு, இவை எல்லாம் வனப் பகுதிகள் என அறிவிப்பு செய்து இருக்கின்றனர். இந்த இடங்களை விட்டுத் தமிழர்கள் வெளியேற வேண்டும் என அச்சுறுத்துகிறார்கள். எத்தனையோ நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாகத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களைப் பறிக்கின்றார்கள்.

ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நெருக்கமான சிங்கள நிறுவனங்கள், பெரிய கருவிகளைக் கொண்டு வந்து மணல் அள்ளுகின்றார்கள். அதனால், அருகிலுள்ள தமிழர்களின் விளைநிலங்களில் பயிர்கள் அழிவதைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. தமிழர்களின் எதிர்ப்புகளைக் கண்டு கொள்வது இல்லை.
தமிழர்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் சிங்களக் குடும்பங்களைக் கொண்டு வந்து குடியமர்த்தி இருக்கின்றனர்.

இதை எதிர்த்து, மயிலத்தமடு பகுதி வாழ் தமிழ் விவசாயிகள், பல மாதங்களாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.வனங்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களைப் பறிப்பது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு, தொல்லியல் துறையின் சார்பில் பெளத்த சமயத் தடங்கள் குறித்த ஆய்வு என்ற பெயரில், தமிழர்களின் நிலங்களைப் பறிக்கின்ற முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

இந்த விடயத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இலங்கை நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஆனால், தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
தொல்லியல் துறை ஆய்வு என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஒரு குழு அமைத்தார்.


அந்தக் குழுவில் சிங்களவர்களும் பெளத்த மதக்குருக்களும் மட்டுமே இடம்பெற்று இருக்கின்றார்கள்.
அவர்கள் மட்டக்களப்பு குசலனமலை குமரன் கோவில், முன்பு பெளத்தர்களின் வழிபாட்டு இடம் என நிறுவுகின்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.
இதுபோன்ற முயற்சிகளால் தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு பறிப்பதை இந்திய அரசும் உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.


ஏற்கனவே பறித்துக்கொண்ட நிலங்களில் இருந்து சிங்களக் குடியேற்றங்களையும் சிங்களப் படை முகாம்களையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்த வேண்டும்” என அவர் கோரிககை விடுத்துள்ளார்.
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *