இலங்கையில் 5 நாடுகளின் 6 வைரஸ் திரிபுகள் பரவியுள்ளன : மருத்துவர் சந்திம ஜீவந்திர

இலஙகையில் 5 நாடுகளின் 6 வைரஸ் திரிபுகள் பரவி வருகின்றன என்று ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான  நிறுவகத்தின்  பரிசோதனையில்  தெரியவந்துள்ளது  என அதன் பணப்பாளர் மருததுவர் சந்திம ஜவந்திர தெரிவத்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இந்தியாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் இலங்கையில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப் பட்டுள்ள ஒருவரிடம் இந்தியாவில் பரவும் பி.1.617 என்ற புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் பி.1.1.7 என்ற வைரஸ் நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மாநகர சபைப் பகுதி, ஹோமாகம, பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களிலும் இந்த வைரஸே பரவி வருகின்றது.

அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் பொல்பித்திகம, குளியாபிட்டி, நிக்கவ ரெட்டிய, கனேவத்தை, அம்பலன்பொல, கிரிவுல்ல, பன்னல, வாரியபொல மற்றும் பண்டுவஸ்நுவர ஆகிய பகுதிகளிலும் பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்திலும், பொலநறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொடை மற்றும் மெதிரிகிரிய, பிரதேசங்களிலும் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. மன்னார் நகரப் பகுதியில் தொற்று உறுதியானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போதும் பிரிட்டனின் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் பி.1.428 என்ற வைரஸ் திரிபுடன் யாழ்ப்பாணத்திலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

நல்லூரை மையமாகக் கொண்டு குறித்த வைரஸ் பரவி வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் சில பிரதேசங்களில் பி.1.411 என்ற இலங்கைக்குச் சொந்தமான தனித் திரிபுடன் வைரஸ் ஒன்று பரவி வருகின்றது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகமை பிரதேசத்திலும் பி.1.525 என்ற நைஜீரியாவில் பரவும்  வைரஸ் திரிபும் அடையாளம் காணப்பட்டுள்ளது.கொழும்பில் அமைந்துள்ள தனியார் தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் பி.1.351 என்ற தென்னாபிரிக்க வைரஸ் திரிபும் கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.
————————————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *