இரணைதீவில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் முடிவை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டில் உடல்களை அடக்கம் செய்வது குறித்து எங்களுக்கு எந்தக் கரிசனையுமில்லை எனத் தெரிவித்துள்ள பொதுச் சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண, ஆனால் உடல்களை அடக்கம் செய்வதற்கான பகுதியைத் தெரிவு செய்யும்போது அனைத்து விடயங்களையும் கருத்தில்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இரணைதீவு சுமார் 12 கிலோமீற்றர் அளவானது. அங்கு 108 குடும்பங்கள் வாழ்கின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்த ஒருவரின் உடலை அவ்வாறான பகுதியில் அடக்கம் செய்வதால் பல சூழல் பிரச்சினைகள் உருவாகலாம் எனத் தெரிவித்துள்ள அவர் அந்தப் பகுதியில் நான்கு குடிநீர் கிணறுகள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
உடல்களை 400 கிலோமீற்றருக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும்
கருத்தில்கொள்ளும்போது இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்யும் முடிவை கைவிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.