நாட்டில் சில வகையான பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டுக்கு இன்று புதன்கிழமை முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்கினால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகளைக் கவனத்திற்கொண்டு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் விவசாய இரசாயனம் அடங்கிய போத்தல் மற்றும் பக்கற்றுகள் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்கைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் காது துடைப்பான்கள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
எனினும், மருத்துவ ஆய்வு மற்றும் வைத்தியசாலை
பயன்பாட்டுக்கான உற்பத்திகள் தடைசெய்யப்படவில்லை.
ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் , இதற்கமைய வாசனைத் திரவியங்கள் மற்றும் நீராகார பொருட்கள் அடைக்கப்பட்ட சிறு பொலித்தீன் பக்கெற் , காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்ரிக் உற்பத்தியிலான விளையாட்டுப் பொருட்கள், மைக் ரோன் 20ற்கு குறைவான லஞ்சீட் (உணவுப் பொதியுறை) ஆகிய உற்பத்திகளை இன்று முதல் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.