அஸ்ட்ரா ஜெனேகாவின் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை சில உலக நாடுகள் இடைநிறுத்தியுள்ளமை குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் ஆனால் தடுப்பூசியைப் பயன்படுத்தாமல் விடுவதற்கான காரணங்கள் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
டென்மார்க், நோர்வே,ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளனர்.
தடுப்பூசியைப் பெற்ற சிலர் குருதி உறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்தே இந்த நாடுகள் தடுப்பூசியை தடை செய்துள்ளன.
இதேவேளை இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் ஆலோசனைக் குழுவின் பேச்சாளர் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி மிகச்சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.
மருந்துக்கும் வெளியாகியுள்ள சுகாதார
பிரச்சினைக்கும் எந்தத் தொடர்புமிருப்பதாக உறுதி செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்ட்ரா ஜெனேகா தடுப்புமருந்தை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எனவும் உலக நாடுகளில் இருந்து கிடைத்துள்ள அறிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ரா ஜெனேகாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து அவுஸ்திரேலியாவின் சுகாதார அதிகாரிகள் கரிசனை எதனையும் வெளியிடவில்லை என பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ரா ஜெனோகா தடுப்பூசியை பயன்படுத்தியவர்கள் சிலர் குருதி உறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே ஸ்கொட் மொறிசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சுகாதாரத் திணைக்களத்தின் செயலாளர் பிரென்டன் மேர்பியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் அவுஸ்திரேலியாவில் அஸ்ட்ரா ஜெனேகாவை பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு ஆலோசனை வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் இடம்பெறும் விடயங்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என பிரதமர் தெரிவித்துள்ளார்
Reported by : Sisil.L