யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக தொடர்ந்து 8ஆவது நாளாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதி மற்றும் ஆளுநர் செயலக நுழை வாயில்களை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வருகைதந்த யாழ்ப்பாணம் பொலிஸார் மாற்று வீதியால் பயணத்தை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகளிடம் தெரிவித்திருந்தனர்.போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்து விழுந்த நிலையில் உடனடியாக அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அத்தோடு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண்சுகாதாரத் தொண்டர் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில்
நேற்றுக் காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.