வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மன்னாரில் நேற்று ரயிலில் மோதி உயிரிழந்தவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப் படுத்தப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று 457 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டன. அவர்களில் 4 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. மன்னாரில் நேற்றுக் காலை ரயிலில் மோதுண்டு உயிரிழந்த 58 வயதுடைய ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவரது சடலத்தில் அன்ரிஜென் பரிசோதனை செய்யப்பட்டபோது தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. அதையடுத்து பி.சி.ஆர். பரிசோதனையும் செய்யப்பட்டு உறுதிப் படுத்தப்பட்டது. கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட அக்கராயன்குளத்தில் இருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் இருவரும் மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள்” என்றார்