சிலி தலைநகர் சான்டியாகோவை தளமாகக் கொண்டு செயற்படும் LATAM விமான நிறுவனத்தின் வர்த்தக விமானமான LA505 அமெரிக்காவின் மியாமியில் இருந்து சிலிக்கு 271 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
இந்த விமானத்தை தலைமை விமானியான 56 வயதான கேப்டன் இவான் ஆண்டர் (Ivan Andaur) என்பவர் இயக்கினார்.
ஆண்டர் 25 வருடங்களுக்கும் மேல் விமானம் ஓட்டிய அனுபவம் வாய்ந்தவர்.
மியாமியில் இருந்து புறப்பட்ட சில மணி நேரத்திலேயே விமானத்தின் கழிவறைக்கு ஆண்டர் சென்றார். அங்கு அவர் திடீரென மயங்கி வீழ்ந்தார். இது தெரிய வந்ததும் உடனடியாக துணை விமானி விமானத்தை இயக்கினார்.
அதே நேரம், ஆண்டருக்கு அவசர கால முதலுதவி சிகிச்சையும் விமானத்தின் உள்ளே இருந்த குழுவால் கொடுக்கப்பட்டது. எனினும், அவருக்கு நினைவு திரும்பாததால், விமானம் மத்திய அமெரிக்காவில் உள்ள பனாமாவின் டாகுமென் (Tocumen) சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அவரை காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக மருத்துவ நிபுணர் குழு ஒன்று விரைந்து சென்று சிகிச்சையளிக்க முற்பட்டது. எனினும், ஆண்டர் ஏற்கனவே இறந்திருப்பது தெரிய வந்தது.
அவரது உடல் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பின், விமானம் சிலியை நோக்கி பயணித்தது.
“ஆண்டரின் உயிரை காப்பாற்ற விமானத்தின் உள்ளே அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டது. இவான் ஆண்டரின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது நீண்ட சேவையையும், அர்ப்பணிப்பையும் நாங்கள் நினைவுகூர்கிறோம். அவரது இறப்பிற்கு எங்கள் வருத்தங்களை தெரிவிக்கிறோம்,”
என LATAM விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
Reported by:N.Sameera