திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் அதிகளவிலான கொரோனாத் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் எனத் திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி. பிரேமானந்த் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த மாதத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இ து வரை 3 1 0 கொரோனா தொற்றா ள ர் க ள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக உப்புவெளி மற்றும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் விசேடமாக 24 மணித்தியாலங்களில் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17, திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15, தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1, குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1, கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 அடங்கலாக திருகோணமலை மாவட்டத்தில் 46 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்திலுள்ள 2 பாடசாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தொற்று அடையாளங்காணப்பட்டுள்ளது. அதனால் அப்பாடசாலைகளில் மாணவர்களது வருகை குறைவாகக் காணப்படுவதால் குறித்த பாடசாலைகள் நிர்வாகத்தினரால் மூடப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் அந்தத் தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்களுக்கு நேற்று அன்டிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டார்.
உப்புவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள பாரிய தனியார் நிறுவனங்களில் சரியான முறையிலான பாதுகாப்பு நடைமுறைகள் செயற்படுத்தப்படாததன் காரணமாக கொரோனாத் தொற்றாளர்கள் சடுதியாக அதிகரித்திருப்பதாகவும், குறிப்பாக சித்திரை வருடப் பிறப்பு காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்துக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தமையாலும் அதிகமாக திருகோணமலை மாவட்டத்தவர்கள் வெளி மாவட்டங்களுக்குச் சென்று வந்தமையாலும் மேலும்
சுகாதார வழிமுறைகளைக் கையாளாததன் காரணமாக பதிவாகிய தொற்றாளர்களது விகிதத்தில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கடந்த வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட கொரோனா செயலணியின் விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் சரியான முறையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான அனைத்து
நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டதுடன் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொருத்தமான சுகாதார வழிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்
Reported by : Sisil.L