மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அடக்க நாளாகிய திங்கட்கிழமை தமிழர் வாழும் பிரதேசமெங்கும் துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டுமென யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளதாவது;
மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, கிறிஸ்தவ மதத் தலைவர் ஆயினும் மத எல்லைகளைக் கடந்து மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கியவர்.
மதம் கடந்த மனித நேய சேவைகளுக்காக அவர், ஈழத் தமிழர்கள் முதல் தமிழ்நாட்டு உறவுகளின் மனங்களிலும் இடம் பிடித்திருந்தார்.
மேலும், போர்க்காலத்தில் மனிதநேயப் பணிகளை முழு வீச்சோடு முன்னெடுத்ததுடன் நீதியோடு கூடிய அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக சம்பத்தப்பட்ட சகல தரப்போடும் ஊடாடி பேச்சுவார்த்தைகள், சந்திப்புகளை அனுசரணை செய்து ஆயர் அர்ப்பணத்தோடு உழைத்திருந்தார்.
அத்துடன், சர்வதேச தரப்புகளிடமும் தமிழர் தரப்பு நியாயங்களைத் தயங்காது எடுத்துரைத்தவர்.
குறிப்பாக, போர் மௌனிப்பின் பின்னர் தமிழர் தரப்பில் துணிவோடு குரலெழுப்ப யாருமே இல்லாத நிலையில் நடந்த இனவழிப்பைத் துணிவோடு பேசு பொருளாக்கியவர்.
இந்நிலையில், தமிழர்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்த ஒரு மகானின் குரல் ஓய்ந்து விட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தி நிற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமிழ் மக்களுக்கான அவரது இலக்குகள் நிறைவேற தொடர்ந்தும் உழைக்குமென உறுதி பூணுகிறது.
இதேவேளை, அன்னாரின் அடக்க நாளாகிய 05.04.2021 திங்கட்கிழமையன்று தமிழர் வாழும் பிரதேசமெங்கும் துக்க நாளாக அனுசரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ள பல்வேறு தரப்புகளுடனும் நாமும் இணைந்து கொள்கிறோம்.
வீடுகளிலும் பொது இடங்களிலும் வணக்கஸ்தலங்களிலும் கறுப்புக் கொடிகளைப் பறக்க விடுமாறும் அனைவரையும் கறுப்புப் பட்டிகளை அணிந்து நடமாடுமாறும் கேட்டுக் கொள்கிறோம். மேலும், பல்வேறு இடங்களிலுள்ள எமது மாணவர்களையும், இளைஞர் அமைப்புகளையும் இதற்கான ஒழுங்கமைப்பில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்”
Reported by : Sisil.L