ஜப்பானில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : 4 மாகாணங்களில் அவசரகால நிலை உத்தரவு

ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்புக்கான 4ஆவது அலை வீசி வருகிறது. இதனால் டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகிய பெருநகரப் பகுதிகள் உள்பட 10 மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரதமர் யோஷிஹிடே சுகா தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.  இதன் முடிவில் பேசிய பிரதமர், வரும் 25ஆம் திகதி முதல் மே 11ஆம் திகதி வரை 4 மாகாணங்களில் அவசர கால நிலைக்கான உத்தரவு அறிமுகப்படுத்தப்பட உள்ளது எனக் கூறினார்.

இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ ஆகிய மாகாணங்களில் மக்களின் போக்குவரத்து குறையும் வகையில் குறைந்த கால அளவுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.


இதனால் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் சேவைகள் தவிர்த்து மற்ற செயல்களுக்கு தடை விதிக்கப்படும். மிகப்பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி இல்லை. மதுபான கூடங்களும் மூடப்படும்.  மீறினால் அபராதம் விதிக்கப்படும்.


ஜப்பான் மக்கள் தொகையில் இதுவரை 1 சதவீதம் பேருக்கே பைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் மற்ற நாடுகளை விட தடுப்பூசி போடுவதில் அந்நாடு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *