ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகையில் சுயஸ் கால்வாய் உருவாக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை 20 ஆயிரம் தொன் பெட்டகங்களுடன் சென்ற ஜப்பானின் ‘எவர்கிவன்’ என்ற கப்பல் சுயஸ் கால்வாயில் சென்ற போது தரை தட்டி நின்றது. இந்தக் கப்பல் கால்வாய் முழுவதையும் அடைத்துக் கொள்ளும் வகையில் திரும்பி நின்றதால் சுயஸ் கால்வாயில் கப்பல் போக்கு வரத்து முழுமையாக தடைப்பட்டது.
உலகின் 15 சதவீத கப்பல் போக்குவரத்து இங்கு நடைபெறுகிறது. இதனால் சுயஸ் கால்வாய் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. கச்சா எண்ணெய், கால்நடைகள் மற்றும் பல்வேறு சரக்குகளுடன் வந்த நூற்றுக்கணக்கான கப்பல்கள் சுயஸ் கால்வாயில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. கோடிக்கணக்கான ரூபா மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இந்தக் கப்பல் சுயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டதால் ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே கடல் வழியான சரக்கு போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் செயற்கைக்கோள் மூலம் கப்பல் நிற்கும் இடம் தரை தட்டிய விதம் ஆகியவை துல்லியமாக கண்காணிக்கப்பட்டன. கப்பல் தரைதட்டி நின்ற கால்வாயின் ஆழமான பகுதியிலுள்ள மண் அகற்றும் பணி நடந்தது.
மீட்புக் குழுவினர், அந்தக் கப்பலை சக்திவாய்ந்த இழுவைப் படகுகள் மூலம் திருப்பி மிதக்க விடும் முயற்சியில் இறங்கினார்கள். 14 இழுவைப் படகுகள் மூலம் தரை தட்டிய கப்பலை இழுத்தனர். இதற்கு கொஞ்சம் கொஞ்சமாக பலன் கிடைத்தது.
ஒருவார கால போராட்டத்துக்குப் பிறகு தீவிர முயற்சி காரணமாக ‘எவர்கிவன்’ கப்பலின் தரை தட்டிய பாகம் அதிலிருந்து விடுபட்டது. இதனால் அந்தக் கப்பல் தரைதட்டிய இடத்தில் இருந்து மீண்டு மிதக்கத் தொடங்கியது.
சுயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவரான லெப்
டினன்ட் ஜெனரல் ஒசாமா ரபே, “இன்று(திங்கள்) காலை இந்த கப்பல் மிதக்கத் தொடங்கியது” என்று தெரிவித்தார். இதனால் ஒருவார போராட்டத்துக்குப் பிறகு சுயஸ் கால்வாய் போக்குவரத்துக்கு வழிபிறந்துள்ளது.
Reported by : Sisil.L