சர்வதேச அளவில் மூன்றில் ஒரு பெண் பாலியல் அல்லது உடலியல் ரீதியில் வன்முறையை எதிர்கொள்ளும் நிலை காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது.
15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 39 வீதமானவர்கள் பாலியல் அல்லது உடல் ரீதியிலான வன்முறையை எதிர்கொண்டுள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
2000 முதல் 2018 வரையில் மேற்கொண்ட ஆய்வை அடிப்படையாக வைத்தே உலக சுகாதார ஸ்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.
கணவர் அல்லது நெருங்கிய துணைவரே அதிகளவில் வன்முறைகளில் ஈடுபடுகின்றார் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்படுபவர்களில் அதிகளவானவர்கள் வறிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தப் புள்ளிவிபரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன என அறிக்கையை எழுதியவர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் விழித்துக்கொள்வதற்கான எச்சரிக்கை இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகின் அனைத்து நாடுகளிலும் அனைத்துக் கலாசாரங்களிலும் காணப்படுகின்றன என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அட்னகொம் கெப்ரயோசிஸ் தெரிவித்துள்ளார். இது பெண்களுக்கு தீமையை ஏற்படுத்துகின்றது எனக் குறிப்பிட்டுள்ள அவர் கொரோனா வைரஸ் காரணமாக இந்த நிலை மோசமாகியுள்ளது என்றார்.