நடந்த அத்தனையையும் அந்த மருத்துவமனை தந்த சிகிச்சை பற்றியும் மருத்துவர்களின் நடத்தை பற்றியும் விரிவாக சமூக வலைத்தளத்தில் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் எழுதியிருக்கிறார்.
கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுமக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் நடிகர் அருண்பாண்டியனும் ஒருவர். கொரோனா பாதிப்பு தொற்று ஏற்பட்டிருக்கிறது எனத் தெரிந்ததும் திருநெல்வேலியில் இருக்கும் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். ஏழு நாள்களுக்குப் பிறகு திடீரென அவருக்கு நெஞ்சு வலி வந்திருக்கிறது. அருகிலிருந்த மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்தபோது எதுவும் பிரச்சினை இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அருண்பாண்டியன் தன் உடலில் ஏதோ பிரச்சினை என மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறார்.
உடனே மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு சோதனை செய்து பார்த்தபோது, அவரது இதயக் குழாய்களில் இரண்டு இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. கொவிட் பொசிட்டிவ் என்பதாலும் அவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என்பதனாலும் கூடுதல் கவனமெடுத்து ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை செய்திருக்கிறார்கள்.
இப்பொழுது அருண்பாண்டியன் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி இருக்கிறார். நடந்த அத்தனையையும் அந்த மருத்துவமனை தந்த சிகிச்சை பற்றியும் மருத்துவர்களின் நடத்தை பற்றியும் விரிவாக சமூக வலைத்தளத்தில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் எழுதியிருக்கிறார்.
வயதானவர்கள் தங்கள் உடலிலிருக்கும் பிரச்சினைகளை வெளிப்படையாகச் சொல்லாமல் அதெல்லாம் எதுவும் இருக்காது எனத் தள்ளிப்போடுவது எப்பொழுதுமே பிரச்சினைதான். அப்படியின்றி அருண் பாண்டியன் சரியான நேரத்தில் தன் உடல் தந்த சமிக்ஞைகளை தெரியப்படுத்தியதால்தான் இப்பொழுது நலமாகியிருக்கிறார்.
கீர்த்தி பாண்டியன் தனது பதிவில் வயதானவர்கள் தங்கள் உடல் நலத்தில் கூடுதல் கவனம் எடுப்பது பற்றியும் கொவிட் காலத்தில் மாஸ்க், சனிடைஸர் உட்பட அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.
——————–
Reported by : Sisil.L