இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த தாயின் சடலத்தை தூக்க ஆள் இல்லாததால், மகனே மயானத்துக்கு தூக்கிச் சென்ற சம்பவம்சோகத்தைஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், வைரஸ் தொற்றுக்கு உள்ளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல், தினசரி இறப்பும் 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மயானங்களில் சடலங்கள் எரியூட்டுவதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை நிலவுகிறது.
ஹிமாச்சல் பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பங்க்வார் கிராமத்தைச் சேர்ந்தவர் வீர் சிங். இவரது தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றுள்ளார். எனினும் மருத்துவமனைகளில் இடம் இல்லாததால் தனது சொந்த கிராமத்திற்கே தாயை அழைத்துச் சென்றார்.
அங்கு, வீர் சிங்கின் தாயார் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து பஞ்சாயத்து தலைவரான சூரம் சிங்கிடம் வீர் சிங் தெரிவித்துள்ளார். எனினும், அவரது தாயாரின் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்ல யாரும் முன்வரவில்லை.
சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்யவும் அவர்கள் முயற்சி செய்யவில்லை. வீர் சீங் வாகனம் ஏற்பாடு செய்ய சிலரிடம் விசாரித்தபோது, கொரோனா பயம் காரணமாக அவரது தாயாரின் சடலத்தை எடுத்துச் செல்ல அவர்களும் மறுத்து விட்டனர்.
வேறு வழி தெரியாததால், வீர் சிங் தாயாரின் சடலத்தை தனது தோளில் சுமந்தபடி நீண்ட தூரம் பயணித்து மயானத்துக்கு எடுத்துச் சென்று எரியூட்டி யுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து எந்தத் தகவலும் தங்களுக்கு வரவில்லை என்றும் துணை வட்டாட்சியர் கூட தெரியப்படுத்தவில்லை என்றும் காங்க்ரா மாவட்ட இணை ஆணையர் ராகேஷ் தெரிவித்துள்ளார்.
——————
Reported by : Sisil.L