கனடாவில் முஸ்லிம் குடும்பமொன்றின் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட டிரக் தாக்குதலில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.ஒன்டாரியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
லண்டன் நகரில் பாதசாரிகள் மீது நதனியல் வெல்ட்மன் என்ற 20 வயது நபர் வேண்டுமென்றே மோதியதில் 74 மற்றும் 44வயதுடைய இரு பெண்களும், 46 வயது நபரும் 15 வயது சிறுமியும் கொல்லப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஒன்பது வயது சிறுவன் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், இஸ்லாமியர்கள் என்பதால் அவர்கள் இலக்கு வைக்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய இளைஞனை கைது செய்தவேளை அவர் உடற்கவசம் போன்ற ஒன்றை அணிந்திருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த பீட்டர் மாட்டின் என்பவர் நான் முதலில் இது மோசமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்து என்று கருதினேன் எனத் தெரிவித்துள்ளார்.
நான் அருகில் சென்று பார்த்ததும் பொலிஸாரையும் உடல்கள் நிலத்தில் காணப்படுவதையும் பார்த்தேன், அந்த நேர கதறல்களில் இருந்து என்னால் விடுபட முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.நான் எனது மகள் கொல்லப்பட்டவர்களின் உடல்களை பார்க்க முடியதவாறு அவளை மறைத்துக்கொண்டேன் என ஒருவர் தெரிவித்துள்ளார்.
2017இன் பின்னர் கனடாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற மோசமான சம்பவம் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
—————————–
Reported by : Sisil.L