கச்சதீவு அருகே மீன் பிடித்த 40 தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளிலிருந்து நேற்றுக் காலை சுமார் 300 படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

நள்ளிரவு நேரத்தில் அவர்கள் கச்சதீவு அருகே இலங்கை -இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் கப்பலில் திடீரென  தமிழக மீனவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். இதனால் பயந்து போன மீனவர்கள் உடனடியாக கரையை நோக்கி விரைந்தனர்.

அப்போது 2 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து அதில் இருந்த மரியசிங்கம், ரொபின்சன், பேசியர், பிராங்ளின், சுப்ரீஸ், சோனைமுத்து, சக்தி, விஜயன், ரோசாலிஸ், குமார், கெரோனிஸ், மகேஸ்வரன், ஜான், கதிர், சிவா, அந்தோணி புளூட்டஸ், ராயப்பூ, அஜிரோ உள்பட 20 தமிழக மீனவர்களை சிறை பிடித்தது.

இதே போல் காரைக்கால், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக

மீனவர்கள் 20 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களிடம் இருந்து 5 படகுகளை பறிமுதல் செய்தனர்.

மற்ற மீனவர்களை அவர்கள் விரட்டி அடித்தனர். பின்னர் 40 மீனவர்களையும் அவர்கள் கைது செய்து இலங்கை மன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 40 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் படகுகளைத் தாக்கி இலங்கை கடற்படை மூழ்கடித்தது. இதில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்தனர்.

இதை கண்டித்து மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *