உயிர்த்த ஞாயிறு தாக்குதல்;கிறிஸ்தவ மக்களின் பொறுமை அளப்பரியது – பிரதமர்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரையான கிறிஸ்தவ மக்களின் பொறுமை அளப்பரியது என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவ பக்தர்களுடன் இணைந்து இலங்கை கிறிஸ்தவ மக்கள் நாளைய தினம் (04) உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடவுள்ளனர்.

மீட்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாளான இந்நாளில், இயேசு கிறிஸ்து, மரணத்தை தோற்கடித்து உயிர்த்தெழுந்தமையை இலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர்.

இத்தால் ஈராண்டுகளுக்கு முன்னர் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட 250 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்தமை நாம் அனைவரும் அறிந்ததே.

அந்தக் கொடிய தாக்குதலை அன்று போன்றே இன்றும் நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் தாக்குதலில் உயிரிழந்த கிறிஸ்தவ மக்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்துக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன்னிறுத்துவதற்கு ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

கிறிஸ்தவ சமூகத்தினர் எதிர்பார்ப்பது போன்று, தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன்னிறுத்தும் வரை விசாரணைகள் தடையின்றி தொடரும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரையான கிறிஸ்தவ மக்களின் பொறுமை அளப்பரியது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

சமூகத்தில் முகங்கொடுக்க நேரிடும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இரக்கம், சகவாழ்வு மற்றும் பரஸ்பர அன்புடன் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வாழ வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.

இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மேலும் தெரிவித்தார்

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *