இஸ்ரேல் ஈரானின் அணு உலை மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டு சேதத்தை ஏற்படுத்திள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் நடான்சில் உள்ள தனது அணுநிலை மீது பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
நடான்சில் உள்ள அணுநிலையத்தில் யுரேனியத்தைப் பதப்படுத்தும் சாதனமொன்றை தொடக்கி வைத்த மறுநாள் இந்த பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி விவகாரங்களுக்கான முக்கிய அதிகாரி அலிஅக்பர் சலேகி இதனைத் தெரிவித்துள்ள அதேவேளை இந்தப் பயங்கரவாத தாக்குதலை யார் மேற்கொண்டிருக்கலாம் என்பது குறித்த விபரங்களை வெளியிட மறுத்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல் காரணமாக டெஹ்ரானின் தென் பகுதியில் உள்ள அணுநிலையில் மின்துண்டிப்பு இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஸ்ரேலிய ஊடகங்கள் புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி சைபர் தாக்குதல் இடம்பெற்றது என்ற செய்தியை வெளியிட்டுள்ளன.
ஈரானின் அணுநிலையத்தில் ஏற்பட்ட மின் துண்டிப்பிற்கு இஸ்ரேலின் சைபர் தாக்குதலே காரணம் என இஸ்ரேலின் அரச ஒலிபரப்பு சேவையான கான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் சைபர் தாக்குதல் மூலமே மின் துண்டிப்பு இடம்பெற்றது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் சைபர் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருத முடியும் என ஹரெட்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஈரான் அணுவாயுதங்களை உற்பத்தி செய்யும் திறனை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் இந்தப் பிரச்சினைக்கு விபத்து காரணமில்லை திட்டமிட்ட சதி முயற்சியே இடம்பெற்றிருக்கலாம் எனக் கருத இடமுண்டு பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L