இந்தியாவில் கொரோனாத் தொற்று மீள அதிகரித்தமைக்கு கொரோனா வைரஸில் ஏற்பட்ட பரம்பரை அலகுத் திரிபுத் தன்மையே காரணமாகும் என மருத்துவர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா வைரஸ் மனித உடலில் தொற்றை ஏற்படுத்தும்போது உடலின் எதிர்ப்புச் சக்தி கொரோனா வைரஸில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அதே போல் தடுப்பு மருந்து செலுத்தியவர்களின் உடலிலுள்ள எதிர்ப்பு சக்தியையும் கொரோனா வைரஸ் எதிர்கொண்டு மாற்றத்துக்கு உள்ளாகின்றது.
இத்தகைய சூழலில் மீளவும் கொரோனாத் தொற்று அலை ஏற்படுவதற்கு மாற்றமடைந்த கொரோனா வைரஸே காரணமாகும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு (Track, Trace, Treat ) சோதித்து கண்டறிந்து சிகிச்சையை மென்மேலும் தொடரல் வேண்டும். அடுத்து சமூக இடைவெளி பேணல், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் என்பவற்றைத் தவறாது கடைப்பிடித்தல் வேண்டும்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்று நிலைக்குச் சமாந்தரமாக எமது பகுதியில் ஏற்படாது இருப்பதற்கு இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகவும் இன்றியமையாதவையாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L