இஸ்ரேல் – பாலஸ்தீனிய மோதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. காஸாவில் அல் ஜெஸீரா (Al Jazeera) மற்றும் அமெரிக்காவின் ஏ.பி. (Associated Press) போன்ற சர்வதேச செய்தி ஊடகங்கள் இயங்கிய 13 மாடிக் கட்டிடம் (Jala Tower) மீது இஸ்ரேலியப் படைகள் நேற்று ரொக்கெட் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளன.
கட்டிடத்தைக் காலி செய்யுமாறு அதன் உரிமையாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்ட பிறகே அதனை தாக்கித் தகர்த்திருக்கிறது இஸ்ரேல். சர்வதேச செய்தியாளர்களை அங்கிருந்து வெளியேறும் உத்தரவு விடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தின் பின்னர் அந்த மாடிக் குடியிருப்புக் கட்டிடம் மீது குண்டுகள் வீசப்பட்டன. கட்டிடம் இடிந்து விழும் காட்சிகளை அல்- ஜெஸீரா
தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
சர்வதேச செய்தியாளர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. கட்டிடம் தரைமட்டமான காட்சிகளை ஒளிபரப்பிய அல் ஜெஸீரா தொலைக் காட்சியின் அறிவிப்பாளர் “அல் ஜெஸீரா அடங்கி விடாது. அல் ஜெஸீராவை மௌனமாக்கி விட முடியாது” என்று அறிவித்தார்.
கட்டடத்தை குண்டுவீசித் தகர்த்ததை ஒப்புக்கொண்டுள்ள இஸ்ரேல் காஸாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் படைகள் அந்தக் கட்டிடத்தை தமது இராணுவ ஆயுத மறைவிடமாகப் பயன்படுத்தி வந்தன என்று தெரிவித்துள்ளது.
இதேவேளை காஸாவில் உள்ள அகதிகள் முகாம் ஒன்று தாக்கப்பட்டதில் எட்டுக் குழந்தைகள் உட்பட பத்துப் பேர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.
ஹமாஸ் இயக்கத்தினர் ஏவியவை எனக் கூறப்படும் ரொக்கட் குண்டுகளால் இஸ்ரேலியத் தலைநகர் ரெல் அவிவில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த திங்களன்று ஆரம்பமான மோதல்களில் இதுவரை 139 பேர் உயிரிழந்துள்ளனர்.
Reported by : Sisil.L