அமெரிக்காவில் 3 இடங்களில் துப்பாக்கிச்சூடு; 8 பேர் பலி

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் மூன்று இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் மசாஜ் பார்லர்களில் (ஸ்பா) நடந்துள்ளது.

ஜோர்ஜியாவின் தலைநகர் அட்லாண்டா புறநகர் பகுதியான அக்வொர்த் என்ற இடத்தில் யங்ஸ் ஆசியன் மசாஜ் என்ற பார்லருக்குள் புகுந்த மர்ம வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கிருந்த பெண்கள் அலறியடித்து ஓடினார்கள்.

இந்தத் துப்பாக்கி சூட்டில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் அப்பகுதியிலுள்ள மற்றொரு மசாஜ் பார்லரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

அதேபோல் அட்லாண்டாவில் பீட்மாண்ட் வீதியிலுள்ள கோல்டு மசாஜ் ஸ்பாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேரும், அரோமா தெரபி ஸ்பாவில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பற்றி தகவல் அறிந்ததும்  அங்கு விரைந்த பொலீசார் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம வாலிபரை மடக்கிப் பிடித்தனர். இந்தத் துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிரிழந்தவர்களில் 6 பேர் ஆசிய நாட்டைச் சேர்ந்த பெண்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட வாலிபர், வுட்ஸ்டாக் பகுதியைச் சேர்ந்த ரொபர்ட் ஆரோன் லாங் (21) என்றும், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடக்கிறது என்றும் தெரிவித்தனர்.

இது குறித்து பொலீஸ் துறை செய்தித் தொடர்பாளர் ஜெ பேக்கர் கூறும்போது, ஒரு மசாஜ் பார்லரில் திருட்டுச் சம்பவம் நடக்கிறது என்று போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்து சென்றனர். அந்த மசாஜ் பார்லரில் துப்பாக்கியால்

சுட்டதில் மூன்று பெண்கள் உயிரிழந்து கிடந்தனர்.

அங்குள்ள மற்றொரு பார்லரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. அக்வொர்த்தில் உள்ள மசாஜ் பார்லரில் துப்பாக்கிச் சூடு நடப்பதை அறிந்து பொலீசார் விரைந்து சென்று மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிந்தனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்றார். இந்தத் துப்பாக்கி சூடு ஆசிய நாட்டவர்களைக் குறி வைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

REPORTED BY : SIRIL.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *