கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணியும் அந்நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் அண்மைக்காலமாக அங்கு நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது.
கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மாஸ்க் அணிவதில் அங்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணியத் தேவையில்லை. 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்றத் தேவையில்லை என அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது. ஒன்றிய, மாநில, உள்ளூர், எல்லைக்குட்பட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ள பகுதிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு இருக்கும் பட்சத்தில் அந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பின் இயக்குனர் ரோச்சல் வேலன்ஸ்கி கூறியதாவது: முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட எவரும் மாஸ்க் அணியாமல் உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். தனி மனித இடைவெளியைப் பின்பற்றவும் தேவையில்லை. இது உற்சாகமான மற்றும் சக்திவாய்ந்த தருணம்.
இதன்மூலம் நாம் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் மாஸ்க் அணியாமல் இருப்பதற்கு முன் தங்கள் மருத்துவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் கணிக்க முடியாதது என்பதை கடந்த ஆண்டு நமக்குக் காட்டியுள்ளது. எனவே விடயங்கள் மோசமாகும் நிலையில் இந்தப் பரிந்துரைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.
———————-
Reported by : Sisil.L