ஸ்பெயின் நாட்டின் அந்தலுசியன் நாடாளுமன்றத்தில், எலி புகுந்து ஓடியதால், எம்.பி.க்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டத்தில், சுசானா டயஸ்-ஐ செனட்டராக நியமிக்க வாக்களிப்பது சம்பந்தமாக நாடாளுமன்ற அவையில் முக்கிய விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எலி ஒன்று நாடாளுமன்றத்திற்குள் அங்கும் இங்கும் ஓடியது.
பெண் எம்.பி.க்களின் காலில் ஏறி எலி ஓடியதால் அவர்கள் அலறியடித்துக் கொண்டு நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினர். இதனால் நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், எலி ஒரு வழியாக வெளியேற்றப்பட்டதும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் இயல்பாகவே மீண்டும் தொடங்கின.
எம்.பி.க்கள் மீண்டும் கூடி, அந்தலுசியன் தன்னியக்க சமூகத்தின் செனட்டராக பெர்னாண்டோ லோபஸ் கிலுக்குப் பதிலாக சுசானா டயஸை தேர்ந்தெடுத்தனர். நாடாளுமன்றத்தில் எலி புகுந்து ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Reported by : Sisil.L