யாழ். மாநகர சபையால் வழங்கப்படும் யாழ் விருது இந்த ஆண்டு வாழ்வக நிறுவனத்தின் தலைவர் ஆ. ரவீந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது.
நல்லைக்குமரன் மலர் வெளியீடு, யாழ் விருது வழங்கல் குறித்து யாழ். மாநகர ஆணையாளரும் சைவ சமய விவகாரக் குழுத் தலைவருமான இ. த. ஜெயசீலன் நேற்று அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில், யாழ். மாநகராட்சி மன்ற சைவ சமய விவகாரக் குழுவினரால் நல்லூர் உற்சவ காலத்தில் முன்னெடுக்கப்படும் நல்லைக் குமரன் மலர் வெளியீடும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி தற்போதைய சூழலில் முழு மையான சுகாதார நடைமுறைகளின் கீழ் நடைபெறுவதற்கு திருவருள் கைகூடியுள்ளது.
இம்முறை யாழ் விருதானது சுன்னாகத்தில் அமைந்துள்ள வாழ்வக நிறுவனத் தின் (விழிப்புலன் வலுவிழந்தோர் இல்லம்) தலைவரும் கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளருமான ஆ. ரவீந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது – என்றுள்ளது.
ஆறுமுகம் ரவீந்திரன் 03.03.1963 இல் சட்டநாதர் வீதி திருநெல்வேலி கிழக்கில் பிறந்தவர். ஆரம்பத்தில் விழிப்புலன் அற்றோருக்கான கல்வி சவாலுக்கு ரியதாக இருந்த காலகட்டத்தில் – கைதடி நவீல்ட் பாடசாலையில் கல்வி பயின்றார். தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 6 முதல் உயர்தரம் வரை கல்வி கற்று 1985இல் பாடசாலையில் இருந்து கலைத் துறையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட ஒரே மாணவர் என்ற பெருமையையும் பெற்றார். 1989 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டதாரியாக வெளியேறினார்.
1993 இல் இருந்து 2004 வரை யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். 2004 தொடக்கம் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
பட்டப்பின் கல்வி டிப்ளோமா, கல்வி முதுமாணி (முதலாவது அணி 2001) பட்டங்களையும் பெற்றவர் இவர்.
வாழ்வக நிறுவுனர் அமரர் திருமதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்மாவின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமான இவர் அவரது மறைவைத் தொடர்ந்து 2006 முதல் வாழ்வகத்தின் தலைவராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
—————
Reported by : Sisil.L