வவுனியாவில் பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் (14 வயது) உதயச்சந்திரன் சஞ்ஜிவன் என்ற மாணவன் காயங்களுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 
வீட்டுக்குப் பின் பகுதியில் தலை மற்றும் முகத்தில் அடிபட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக் காயத்துடனும் குறித்த சிறுவன் சடலமாக காணப்பட்டதுடன் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளும் ஆரம்பமாகின.


 குடும்பத்தில்  கடைசிப் பிள்ளையான  இவருக்கு மூன்று அக்கா, அண்ணன் ஒருவர் என நான்கு சகோதரர்கள் உள்ளனர்.
இவர்களது வளவினுள் வர்த்தக நிலையக் கட்டிடம் மற்றும் வீடு என்பன அமைந்துள்ளதுடன் பெரிய வீடு ஒன்றிற்கான நிர்மாணப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.


இவர்கள் தற்போது வசிக்கும் வீட்டில் அனைவரும் ஒன்றாக தங்குவதற்கு போதிய வசதியின்மையால் குறித்த சிறுவனும் அவரின் அண்ணாவும் அவர்களின் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலைய கட்டிடத்தில் இரவு நேரத்தில் தங்குவது வழமை.


வழக்கம் போல் உறக்கத்துக்குச் சென்ற நிலையிலேயே இன்று (06.07.2021) காலை சிறுவனைக் காணவில்லை என சிறுவனின் சகோதரிகள் தேடிய சமயத்தில் இவர்கள் உறங்கும் வர்த்தக நிலையத்தின் பின் பகுதியில் தலை தரையை நோக்கியவாறு (பின் பக்கமாக) உடல் காணப்பட்டுள்ளது.


 சடலத்தை திருப்பி பார்வையிட்ட சமயத்தில் முகத்தில் காயங்களுடனும் கழுத்தில் வெட்டுக் காயங்களுடனும் சிறுவன் சடலமாக காணப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்துடன் தடயவியல் பொலிஸாரின் உதவியையும் பெற்றிருந்தனர்.


அதன் பின்னர் வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு சம்பவ இடத்துக்கு வருகை தந்து தடயங்களைப் பார்வையிட்டதுடன் சிறுவனின் சகோதரன், சகோதரனின் நண்பன் ஆகியோரிடம் விசாரணையையும் முன்னெடுத்திருந்தார். எனினும் இதுவரையில் சிறுவனின் மரணம் தொடர்பில் மர்மம் நிலவுகின்றது.
—————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *