கனடாவின் வன்கூவரிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கான நேரடி விமான சேவையை ஏர் கனடா நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உக்ரைன் போர் விவகாரம் முதன்மையானது என குறிப்பிடப்பட்டுள்ளது. சேவை ரத்து நடவடிக்கையானது ஜூன் 2ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 6ஆம் திகதி வரையில் நீடிக்கும் என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் கனடா தரப்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் நடந்து வரும் போர் ஒரு முக்கிய காரணியாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானப் பாதைகள் ரஷ்ய மற்றும் உக்ரைன் வான் பரப்பைச் சுற்றிச் செல்ல வெண்டும் என்பதுடன், நீடிக்கப்பட்ட பறக்கும் நேரங்கள் மற்றும் மீண்டும் எரிபொருள் நிரப்பும் நிறுத்தம் தேவைப்படுவதால், தற்போதைய சூழலில் குறித்த பாதை செயல்பாட்டுக்கு தடையாக உள்ளது என ஏர் கனடா விளக்கமளித்துள்ளது.
மேலும் ஜூன் 2 முதல் செப்டம்பர் 6 வரை ஏற்கனவே பயண முன்பதிவு செய்தவர்கள் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி மாற்று விமானங்களில் தானாகவே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மேலதிக தகவல்களுக்கு உரிய இணைய பக்கங்களைப் பார்வையிட வேண்டும் எனவும் ஏர் கனடா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும், ரொறன்ரோ மற்றும் மொன்றியலில் இருந்து இந்தியாவிற்கு வாராந்திர 11 விமானங்கள் வரை வெவ்வேறு விமானப் பாதைகளைப் பயன்படுத்தி தொடர்ந்து இயக்கப்படும் எனவும் ஏர் கனடா குறிப்பிட்டுள்ளது.
—————————-
Reported by : Sisil.L