யாழ்.கொக்குவிலில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது

கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வாள் ஒன்றும் வன்முறைச் சம்பவத்துக்கு
பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.


கொக்குவில் குளப்பிட்டி சந்திப்பகுதியில் நேற்று முன் தினம் இரவு இனந்தெரியாத நபர்களினால் புடைவைக் கடை ஒன்றுக்கு பெற்றோல் குண்டுத்  தாக்குதல் மூலம் தீ மூட்டப்பட்டது.


இந்தச் சம்பவம் இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.


ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வாள்கள் மற்றும் பெற்றோல் குண்டு சகிதம் கடைக்குள் புகுந்து இந்த நாசகார செயலைச் செய்துள்ளனர்.
இதன்போது கடையில் இருந்த புடைவைகள் மற்றும் அண்மையில் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புடைவைகள் உட்பட பல லட்சம் ரூபா சொத்து தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.


தொழில் போட்டி காரணமாக இந்தச் சம்பவம் கைக்கூலிகள் மூலம் செய்யப்பட்டிருக்கலாம் என யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தக் கடைக்கு எதிரில் இன்னொரு புடைவைக்கடை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


தீ மூட்டப்பட்ட கடை உரிமையாளர் குறைந்த விலைக்கு பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் எதிர்க் கடை வியாபாரியுடன் மனஸ்தாபம் ஒன்று ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.


சந்தேக நபர்களைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
—————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *