இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 64 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 6 ஆண்டுகளாக மீட்கப்படாமல் இலங்கை வசம் உள்ள 133 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டத்தை இன்று (06) தொடங்கி நடத்தி வருகிறது.
ராமநாதபுரம் – ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த மாதம் 14 மற்றும் 28 ஆகிய இரு திகதிகளில் மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 64 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இந்திய மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இலங்கை வசம் உள்ள 133 விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இலங்கை நீதிமன்றத்தில் படகின் உரிமையாளர்கள் நேரடியாக ஆஜராகி விடுதலையான விசைப்படகுகளை மீட்பதற்கு மீட்பு குழு இலங்கை செல்வதற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் பாரம்பரிய பகுதியான கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமையை பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடம், யாகப்பா பேருந்து நிலையத்தில் மீனவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நாளை (07) மாலை 5 மணி வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை கண்டித்தும், மீனவர்கள் கைது நடவடிக்கை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மீனவர்களின் இந்த உண்ணாவிரத போராட்டம் காரணமாக இன்று மற்றும் நாளை இரு தினங்கள் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Reported by:N.Sameera