மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவானார்

மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் அந்நாட்டு மன்னரால் நியமிக்கப்பட்டுள்ளார். மலேசியாவில் கூட்டணி அரசில் ஏற்பட்ட குழப்பத்தால் பிரதமர் மகாதீர் கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக முஹைதீன் யாசின் பதவி ஏற்றார். கொரோனா காரணமாக கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையை மன்னரின் ஒப்புதல் இல்லாமலேயே பிரதமர் முஹைதீன் யாசின் திரும்பப்பெற்றது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதைத்தொடர்ந்து பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கூட்டணியிலிருந்து விலகியது. இதனால் பிரதமர் முஹைதீன் யாசின் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது. மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்தால் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஆனால் பிரதமர் முஹைதீன் யாசின் தனது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி வந்தார்.


ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் முஹைதீன் யாசின் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். இந்த நிலையில் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப்பை மன்னர் நியமித்துள்ளார். இஸ்மாயில் சப்ரிக்கு 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 114 பேர் ஆதரவு தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *