இலங்கை மத்திய வங்கி மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக மாதாந்தம் 25 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தத் தவறினால் மருந்து இறக்குமதி நிறுத்தப்படுமென மருந்து இறக்குமதியாளர்கள் சபை எச்சரித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் இந்த டொலர்களை பெற்றுக் கொள்ளுமாறு பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு வாரங்களாகியும் கடன் கடிதங்களை வழங்குவதற்கு டொலர் கிடைக்கவில்லை. இதனால் மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அது மோசமாகும் எனவும் தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்துள்ளார்.
மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டை நீக்கி விலையை அதிகரிக்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமணவிடம் மருந்து இறக்குமதியாளர்கள் சபை கோரிக்கை விடுத்திருந்தது.
இதன்படி எதிர்காலத்தில் மருந்துகளின் விலையை 5% அதிகரிக்க இராஜாங்க அமைச்சு அனுமதி வழங்கவுள்ளது. தற்போது பல அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
———
Reported by : Sisil.L