மன்னார் மாவட்டத்தில், ‘பைசர்’ தடுப்பூசி செலுத்தும் பணி, நேற்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களில், அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு, அதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, குறித்த கிராமங்களைச் சேர்ந்த, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், நேற்று நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த, வங்காலை, அச்சங்குளம், நறுவலிக்குளம், வஞ்சியங்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த, 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் தலைமையில், வங்காலை புனித அன்னம்மாள் ஆலய வளாகத்தில் வைத்து, தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதேவேளை, முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், வைத்திய அதிகாரி ஒஸ்மன் டெனி தலைமையில், அரிப்பு, சிலாவத்துறை, முத்தரிப்புத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு, தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
மன்னார் மாவட்டத்துக்கு, சுமார் 20 ஆயிரம் ‘பைசர்’ தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில், 2 ஆம் கட்டமாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தலைமையில் இடம்பெறும், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், தொற்று நோய் விஞ்ஞானாப் பிரிவிற்கான வைத்திய அதிகாரி உட்பட, சுகாதாரத் துறையினர் கடமைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிகளவான மக்கள், ஆர்வத்துடன் தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றனர்.
———————–
Reported by : Sisil.L